35. அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில்
இறைவன் பசுபதீஸ்வரர்
இறைவி காம்பன தோளியம்மை
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
தல விருட்சம் சரக்கொன்றை
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருப்பந்தணைநல்லூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'பந்தநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலத்துக்கு வடமேற்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவிடைமருதூரிலிருந்து கஞ்சனூர் வழியாகவும் செல்லாம்.
தலச்சிறப்பு

ஒருசமயம் கயிலையில் அம்பிகை பூப்பந்து ஆடிக்கொண்டிருந்தபோது சிவபெருமான் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் கோபமடைந்த இறைவன், பார்வதியை பூவுலகில் பசுவாக மாறும்படி சாபமிடுகிறார். பார்வதி சாபவிமோசனம் வேண்ட, சிவபெருமான் அந்த பூப்பந்தை உதைத்து, அது எங்கு விழுகிறதோ அங்கு சென்று வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார். அவ்வாறு பந்து அணைந்த (விழுந்த) இந்த தலமே 'பந்தணைநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது.

மகாவிஷ்ணு இடையர் வடிவெடுத்து கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் பசுவுக்கு எந்த தொந்தரவும் வராமல் காத்து பார்வதி மீண்டும் சிவபெருமானை திருமணம் செய்துக் கொள்ள உதவுகிறார். அதனால் இத்தலத்தில் சிவபெருமான் கல்யாண சுந்தரராகக் காட்சி அளிக்கின்றார். மேலும் இக்கோயிலில் ஆதிகேசவப் பெருமாள் சன்னதியும் உள்ளது.

மூலவர் 'பசுபதீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை பசு வடிவத்தில் வந்து வழிபட்டதன் அடையாளமாக லிங்கத் திருமேனியில் குளம்பின் வடு ஒன்று உள்ளது. அம்பாள் 'வேணுபுஜாம்பிகை', 'காம்பன தோளியம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகின்றார். பிரகாரத்தில் விநாயகர், நவலிங்கங்கள், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். இக்கோயிலில் சிவபெருமானின் திருமணக் கோலத்தைக் காண நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சி தருகின்றனர்.

கண் பார்வை அற்ற காம்பீலி தேச அரசரின் மகன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு கண் பார்வை பெற்றான். மகாவிஷ்ணு, பிரம்மா, வாலி, இந்திரன், சூரியன், கண்ணுவ முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com